உலகளவில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் சூழலில், தப்லீகி ஜமாத் என்ற இஸ்லாமிய அமைப்பு சார்பில் கடந்த மாதம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ராய்விண்டு பகுதியில் சர்வதேச அளவிலான மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.
இந்த மாநாட்டில் அந்த அமைப்பின் ஃபைசலாபாத் நகரத் தலைவர் மவுலானா சுஹாய்பு ரூமியும் கலந்துகொண்டார்.
இந்நிலையில், சில நாள்களுக்குப் பிறகு அவருக்கு கரோனா நோய் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
பின்னர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் கடந்த வியாழக்கிழமை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக ஃபைசலாபாத் நகர துணை ஆணையர் முகமது அலி தெரிவித்தார்.
தப்லீகி ஜமாத் அமைப்பைச் சேர்ந்த ஆயிரத்து 100-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளதாகப் பஞ்சாப் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ராய்விண்டு மாநாட்டில் கலந்துகொண்ட ஏராளமான மத போதகர்களை வலைவீசிக் கண்டுபிடித்த பாகிஸ்தான் அரசு இவர்களைத் தனிமைப்படுத்தியது.
பாகிஸ்தானில் இதுவரை ஏழாயிரத்து 260 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், 137 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் மட்டுமின்றி இந்தியா, மலேசியா, ப்ரூனி ஆகிய நாடுகளில் தப்லீகி ஜமாத் நடத்திய மாநாடே கரோனா பரவல் தீவிரமடைவதற்கு முக்கியக் காரணியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : வூஹானில் மேலும் 1,29O பேர் கரோனாவுக்கு உயிரிழப்பு