ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கின்ஸ், கிளாரன்ஸ் ஆகியவை முக்கிய வீதிகளாகும். இந்த வீதிகள் எப்போதும் பரபரப்புடன் காணப்படும். இந்நிலையில், இன்று இந்த வீதிகளில் எப்போதும்போல் பாதசாரிகள் நடந்து சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென எங்கிருந்தோ வந்த நபர் வீதியில் நடந்த சென்றவர்களை அடுத்தடுத்து கத்தியால் குத்திக் கொண்டே சென்றார். இதனைக் கண்ட மற்றவர்கள் அங்கிருந்த தலைதெறிக்க ஓடினர்.
இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு விரைந்துவந்த காவல் துறையினர் கத்திக் குத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கத்திக்குத்து நடத்திய ஆசாமியை லாவகமாக பிடித்த காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதனிடையே, சம்பவ இடத்தில் காவல் துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த இடத்தின் வழியே செல்ல வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் சிட்னியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.