கெளதம புத்தரின் பிறப்பு ஞானம், பரிநிர்வாணம் ஆகியவற்றை குறிக்கும் வகையில் வெசாக் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாப்படுவது வழக்கம். அந்த வகையில், இன்று இந்த பண்டிகை பல்வேறு நாட்டில் கொண்டாப்படுகிறது. மின் விளக்கு தோரணங்களில் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது இந்த பண்டிகையின் சிறப்பம்சமாகும்.
இந்நிலையில், இலங்கை மக்களுக்கு அதிபர் மைத்திரிபாலா சிறிசேன, பிரதமர் ரணில் விகரமசிங்கே, முன்னாள் அதிபரும் எதிர்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்சே ஆகியோர் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளனர்.
அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புத்தர் கற்றுக்கொடுத்த நல்லிணங்களை வாழ்க்கையில் கடைப்பிடித்து சிறந்த சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும். வெறுப்பை வெறுப்பு மூலம் முறியடிக்க முடியாது. அன்பு மூலமே அகற்ற முடியும் என்ற புத்தர் சொல்லின் அடிப்படையில் அனைவரும் வாழ வேண்டும்" என குறிப்பிட்டுள்ளாார்.
இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது ட்விட்டர் பக்கத்தில், "வெடிகுண்டு தாக்குதலால் இருண்டுள்ள நாட்டில் வெசாக் பண்டிகை மூலம் முழு நிலவின் வெளிச்சம் ஏற்பட்டுள்ளது. இத்தருணத்தில் புத்தரின் வாழ்க்கை பாடம் நம்மை ஆன்மிகம், பொது நோக்கம் உள்ளிட்டவற்றிற்கு மனித குலத்தை கொண்டு செல்லும் " என்று பதிவிட்டுள்ளார்.
இதேபோல் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சே தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த வெசாக் பண்டிகை மூலம் இருட்டு, ஏற்றத்தாழ்வு உள்ளிட்டவை அகன்று அமைதிக்கான அறிகுறி ஏற்பட்டுள்ளது " என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வெசாக் பண்டிகையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.