ஜப்பானின் நீண்டகால பிரதமர் என்கிற சாதனை படைத்த ஷின்ஸோ அபே, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஜப்பானில் ஆளும் கட்சியின் தலைவர் பொறுப்பை வகிக்கும் நபரே தான் நாட்டின் பிரதமராக இருப்பது வழக்கம்.
இதனால் ஜப்பானின் ஜனநாயகக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில் ஜப்பானின் தலைமை அமைச்சரவைச் செயலர் யோஷிஹைட் சுகா 377 வாக்குகளுடன் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றார்.
அவரைத் தொடர்ந்து, அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் பமியோ கிஷிடா 89 வாக்குகளையும், முன்னாள் ராணுவ அமைச்சர் ஷிகெரு இஷிபா 67 வாக்குகளையும் பெற்றனர்.
புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யோஷிஹைட் சுகா இன்று (செப்.16) ஜப்பான் பிரதமராக பதவியேற்கவுள்ளார். அவர் அடுத்த ஓராண்டுக்கு கட்சியும் ஆட்சியையும் வழிநடத்தவுள்ளார். இந்நிலையில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேவின் பழைய அமைச்சரவை ஒட்டுமொத்தமாக தங்கள் ராஜினாமா கடிதத்தை சமர்பித்துள்ளது.
கரோனா பரவலைக் கட்டுக்குள் வைக்கும் அதேநேரம், தற்போது பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுவரும் உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமான ஜப்பானை மீட்க அவர் என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அவர் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேவின் கொள்கைகளையே முன்னெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'ஹாங்காங் சென்றால் கைதுசெய்யப்படலாம்' - எச்சரிக்கும் அமெரிக்கா