பாகிஸ்தான் நாட்டில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ‘பாகிஸ்தான் தாய்’ (Madar-e-watan) என்ற விருதைப் பெற்ற முதல் பாகிஸ்தான் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றவர் இந்தியாவின் மகளான ஷீலா ஐரீன் பந்த்.
உத்தரக்காண்ட் மாநிலத்திலுள்ள அல்மோராவில் பிறந்து, பாகிஸ்தான் நாட்டின் முதல் பிரதமரான லியாகத் அலி கானைக் கரம்பிடித்தவர் ஐரீன். தனது இறுதி மூச்சு பிரியும் வரை பெண்களின் உரிமைக்காகப் போராடி, அடிப்படைவாதச் சக்திகளுக்காக எதிராகக் கர்ஜித்தார்.
இந்தியாவிற்கு அல்மோரா அளித்த கொடை:
வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான அல்மோரா, பல சிறந்த மனிதர்களை இந்திய நாட்டிற்கு வழங்கியுள்ளது என்றே கூறலாம். பாரத ரத்னா விருது பெற்ற கோவிந்த் வல்லப் பந்த்தாகட்டும் (உ.பி.யின் முதல் முதலமைச்சர், சுதந்திரப் போராட்ட வீரர்), நடன மேதை உதய் சங்கராகட்டும் இவர்கள் இருவருமே அல்மோராவிலிருந்து நாட்டுக்குத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள்தான்.
பாகிஸ்தானின் முதல் பிரதமரான லியாகத் அலி கானை (1947-1951) மணமுடித்து, பாகிஸ்தானின் முதல் பெண்மணியாகி இவர்களுடன் தன்னையும் இணைத்துக்கொண்டார் ஐரீன். பேகம் ரானா லியாகத் அலிகான் என்ற பெயரில் அழைக்கப்படும் இவரின் சேவையைப் பாராட்டி 'நிஷான்-இ-இம்தியாஸ்' என்ற பட்டத்தை வழங்கி பாகிஸ்தான் கௌரவித்தது.
ஐரீனின் ஆரம்பக்கால வாழ்க்கை:
1905ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் நாள் ஐரீன் டேனியர் பந்த் என்பவருக்கு மகளாகப் பிறந்தார். 1887ஆம் ஆண்டு வாக்கில் இவரின் தாத்தா கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதால், இவர்களின் குடும்பம் கிறிஸ்தவ குடும்பமாக மாறியது. ஆரம்பக் கல்வியை அல்மோராவிலும், நைனிதாலிலும் பயின்ற ஐரீன், மேல்நிலைக் கல்வியை லால் பாக் பள்ளியில் முடித்தார். இசபெல்லா தோபர்ன் கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் மதம் குறித்த ஆராய்ச்சிப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
ஐரீன் முன்னோர்களின் வீடு இப்போதும் அல்மோராவிலுள்ள மெதடிஸ்ட் தேவாலயத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறது. அங்கு அவரது சகோதரர் நார்மன் பந்த்தின் மகள் மீரா பந்த், ஐரீன் பேரன் ராகுல் பந்த் ஆகியோர் குடியிருக்கின்றனர்.
பழைய நினைவலைகளை அசைபோடும் ராகுல் பந்த், தனது பாட்டி திருமணத்திற்குப் பின் அல்மோராவுக்கு ஒருமுறை கூட வரவில்லை என்றும், தனது தாத்தா (ஐரீன் சகோதரர்) நார்மனுக்கு அடிக்கடி அவர் கடிதம் எழுதுவார் என்றும் கூறுகிறார்.
லியாகத் அலி கான் உடனான அந்த முதல் சந்திப்பு எப்படி நடந்தது?
ஐரீன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில், பிகாரில் பெரும் வெள்ளம் ஏற்பட்டிருந்தது. இவ்வெள்ளத்தால் பெருவாரியான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்திருந்தனர். அவர்களுக்கு உதவுவதற்காக தனியார் அறக்கட்டளை ஒன்று நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதாகவும், அதற்கு டிக்கெட் விற்பனை செய்ய வேண்டும் என்றும் பெற்றோர் ஐரீனிடம் கூறியுள்ளனர்.
டிக்கெட் விற்பதற்காக லக்னோ சட்டப்பேரவைக்குச் சென்றிருந்த ஐரீன், முதல்முறையாக தன்னுடைய வருங்கால கணவர் லியாகத் அலி கானைச் சந்தித்துள்ளார். தான் பாகிஸ்தான் முதல் பிரதமரின் மனைவியாவோம் என்று அப்போது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
டிக்கெட் வாங்க மறுத்த லியாகத்திடம் எப்படி ஐரீன் டிக்கெட்டை விற்றார்?
இவர்களின் முதல் சந்திப்பில் சுவாரசியத்திற்குச் சற்றும் குறைவில்லை என்றே சொல்லலாம். ஆம், ஆரம்பத்தில் டிக்கெட் வாங்க தயாங்கியிருக்கிறார் லியாகத். ஆனால், ஐரீனுக்கோ அவரிடம் எப்படியாவது இரண்டு டிக்கெட்டுகளைத் தள்ளிவிட்டுவிட வேண்டும் என்று பேராசை.
நிகழ்ச்சிக்கு தனக்குத் துணையாக அழைத்துவர யாரும் இல்லை என்று லியாகத் கூற, சற்றும் தாமதிக்காமல் நான் உங்களுடன் வருகிறேன் என்று ஐரீன் கூறி டிக்கெட்டுகளை விற்றுள்ளார். இப்படியாக இவர்களின் முதல் சந்திப்பே படு சுவாரசியமாக நிகழ்ந்தது.
இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து திருமணத்தில் முடிந்தது எப்படி?
கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேலாக டெல்லியிலுள்ள இந்திரபிரஸ்தா கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார் ஐரீன். அச்சமயத்தில் உத்தரப்பிரதேச சட்டப்பேரவையின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் லியாகத்.
அவருக்கு வாழ்த்து கூறி ஐரீன் கடிதம் எழுதி அனுப்ப, பதிலுக்கு லியாகத் கடிதம் எழுதி, அவரை கொனாட்டிலுள்ள வெங்கரின் உணவகத்திற்கு தேநீர் சந்திப்புக்கு அழைத்துள்ளார்.
இதேபோன்று இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொண்டதன் விளைவாக இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து, திருமணத்தில் முடிந்தது. ஏற்கனவே திருமணமாகியிருந்த லியாகத் 1933ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி டெல்லியிலுள்ள விலையுயர்ந்த மென்டெஸ் (ஓபராய் மென்டெஸ்) நட்சத்திர ஹோட்டலில் ஐரீனுடன் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின் இஸ்லாம் மதத்திற்கு மாறி, தனது பெயரை குல் ராணா என்றும் மாற்றிக்கொண்டார் ஐரீன். இருவருக்கும் அஸ்ரப், அக்பர் என்ற மகன்கள் பிறந்தனர்.
மனைவிக்கு அமைச்சரவையில் இடம்கொடுத்த பிரதமர் லியாகத்:
1947இல் பாகிஸ்தான் நாட்டின் முதல் பிரதமரானார் லியாகத். 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது கணவரோடு டெல்லியிலிருந்து கராச்சிக்கு விமானத்தில் விரைந்தார் ஐரீன். ஏனெனில், அப்போது அவர் பாகிஸ்தான் நாட்டின் முதல் பெண்மணியாகியிருந்தார். பின்னர் தனது அமைச்சரவையில் மனைவிக்கு சிறுபான்மையினர் மற்றும் பெண்கள்நலத் துறை அமைச்சர் பதவி வழங்கினார்.
ஐரீனின் வாழ்க்கைப் பாதையைத் திசைதிருப்பிய கோர நிகழ்வு:
1951ஆம் ஆண்டு ராவல்பிண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற லியாகத் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். கணவணின் இழப்பை எண்ணிக்கொண்டே கலங்கிய நீரைப் போல் ஒரே இடத்தில் தேங்கி நின்றுவிடக் கூடாது என்று நினைத்த ஐரீன் தெளிந்த நீரோடையைப் போல் செயல்படத் தொடங்கினார்.
கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்த முழங்கிய ஐரீன்!
அவரின் அந்த எண்ணம்தான் பாகிஸ்தான் முதல் பிரதமரின் மனைவி என்ற அடையாளத்தைக் கொடுக்காமல், அவரை வரலாற்றில் தனித்த இடத்தைப் பெற்றுத்தந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
கணவர் இறந்தபின் இந்தியாவிற்குத் திரும்பிச் செல்லாத அவர், பாகிஸ்தானில் பெண்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கலானார். அடிப்படைவாதிகளுக்கு எதிராக முழங்கினார். ராணுவ ஜெனரல் முகம்மது ஜியா உல் ஹக்கின் கொடுங்கோல் ஆட்சியைப் பலரும் எதிர்க்கத் தயங்கியபோது, சிங்கமாக கர்ஜித்தார்.
சுல்பிகர் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டதையடுத்து பாகிஸ்தானில் அரங்கேறிக்கொண்டிருந்த ராணுவ சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து பரப்புரை செய்தார்.
இந்தியாவில் பிறந்து பாகிஸ்தான் தாயாக உயர்ந்த ஐரீன்:
பெரும் சேவையாற்றிய இவர் ஹாலாந்து நாட்டுக்கும், பின் இத்தாலி நாட்டுக்கும் பாகிஸ்தான் தூதராக நியமிக்கப்பட்டார். இதுமட்டுமில்லாமல், நெதர்லாந்து, துனிசியா நாடுகளுக்கும் தூதுராகச் செயல்பட்டார். இவர் சிந்த் மாகாணத்தின் ஆளுநராகவும், கராச்சி பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணை வேந்தராகவும் நியமிக்கப்பட்டார்.
மக்களுக்காகத் தொடர்ந்து சேவையாற்றி, இறுதிமூச்சு வரை உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த ஐரீன் தன்னுடைய 85ஆவது வயதில், 1990ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி இயற்கை எய்தினார். தன் வாழ்நாளில் 43 வருடங்களை இந்தியாவில் கழித்த அவர், அதே நாள்களை பாகிஸ்தானிலும் கழித்திருந்தார். 1947ஆம் ஆண்டுக்குப் பின் மூன்று முறை இந்தியா வந்த ஐரீன், ஒருமுறை கூட தன்னுடைய பூர்வீகமான அல்மோராவுக்குச் செல்லவே இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க: கர்தார்பூர் வழித்தட விவகாரத்தில் பாகிஸ்தான் போலியான நல்லிணக்கம் காட்டுகிறது - இந்தியா