பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லண்டனில் மருத்துவ சிகிச்சைக்காக தங்கியுள்ளார். கடந்தாண்டு நவம்பர் 20ஆம் தேதி உடல்நிலையைக் காரணம் காட்டி, நான்கு வார அனுமதியுடன் லண்டன் சென்றார்.
ஆனால் அதன்பின்னர் இன்றுவரை நவாஸ் ஷெரீப் நாடு திரும்பவில்லை. இதனிடையே அவர் ஆட்சியின்போது நடந்த ஊழல் வழக்குகள் குறித்த விசாரணைகள் அந்நாட்டு நீதிமன்றத்தில் நடந்துவருகின்றன. இதற்கு முன்னிலையாகுமாறு நீதிமன்றத்தின் மூலம் பலமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டும் அவர் முன்னிலையாகவில்லை.
பின்னர் செப். 10ஆம் தேதிக்குள் நவாஸ் ஷெரீப் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என நீதிமன்றம் கெடுவிதித்தது. இதனால் நவாஸ் ஷெரீப் செப். 10ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் முன்னிலையாவாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் செப்.10ஆம் தேதிக்குள் அவர் முன்னிலையாவதற்குச் சாத்தியமில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைப்பற்றி தனியார் செய்தித்தாளில், ''நவாஸ் ஷெரீபிற்கு இன்னும் இரண்டு வாரங்களில் சிகிச்சை திட்டமிடப்பட்டுள்ளது. சிகிச்சையைப் பாதியில் நிறுத்திவிட்டு வர இயலாது.
இந்த விவகாரத்தில் நவாஸ் ஷெரீபின் குடும்பத்தினரும், அவரது தொண்டர்களும் சிகிச்சை முடிவடைந்த பின்னரே நாடு திரும்ப வேண்டும் என நினைக்கின்றனர்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் இம்ரான் கானின் உயர்மட்ட சிறப்பு உதவியாளர் பதவி விலகல்!