கோவிட்-19 தொற்று உலகிலுள்ள 185-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களைப் பாதித்துள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் ரஷ்யாவில் முதலில் தலைநகர் மாஸ்கோவைத் தவிர மற்ற பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை.
இது பெருந்தொற்றுப் பரவலை அதிகரித்தது. அதன் பிறகே நிலைமையின் தீவிரத்தன்மையை உணர்ந்த புடின் நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தினார்.
இந்நிலையில் வியாழக்கிழமை ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டினுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கோவிட்-19 தொற்று உள்ளது உறுதிசெய்யப்பட்டது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பின் சர்வதேச அளவில் அரசின் முக்கியத் தலைவர் ஒருவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் அவர் காணொலி வாயிலாக உரையாடினார். அதில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் மிக முக்கிய நடவடிக்கைகளில் மட்டும்தான் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தார். இருப்பினும் இவ்விரு தலைவர்களும் எப்போது கடைசியாக நேரில் சந்தித்துக்கொண்டார்கள் என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.
பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் பணிகளை துணை பிரதமர் ஆண்ட்ரி பெலோசோவ் மேற்கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரஷ்ய அதிபர் புடின் கூறுகையில், "உங்களுக்கு நடந்துள்ளது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். அதிபர் அலுவலகத்தில் மற்ற அமைச்சர்களுடன் நீங்களும் கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படும் இடத்திலிருந்தீர்கள்.
நீங்கள் எவ்வளவு தூரம் பிறரைத் தொடர்புகொள்வதைக் குறைந்துக்கொண்டாலும், முக்கிய முடிவுகளை எடுக்கும்போது மற்றவர்களைத் தொடர்புகொள்ளாமல் இருக்க முடியாது. முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய ஆலோசனைக் கூட்டங்களில் நீங்கள் கலந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் பங்கேற்பின்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்படமாட்டாது" என்றார்.
மேலும், விரைவில் பிரதமர் உடல் நலம்பெற வாழ்த்துவதாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் தன்னை தொடர்புகொள்ளும்படியும் ரஷ்ய அதிபர் புடின் பிரதமர் மிகைல் மிஷுஸ்டினிடம் கூறியுள்ளார்.
ரஷ்யாவில் கோவிட்-19 தொற்று காரணமாக ஒரு லட்சத்து ஆறாயிரத்து 498 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1073 பேர் உயிரிழந்துள்ளனர். அவர் தற்போது தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் அமெரிக்க பொருளாதாரம் பெரும் சரிவு!