சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கோவிட்-19 பெருந்தொற்று உலகெங்கிலும் பரவி பெரும் பேரிடரை ஏற்படுத்தியுள்ளது.
இனம், மொழி, தேச எல்லைகள் என பாரபட்சம் பார்க்காமல் சர்வதேசமும் பரவி வரும் இந்த நோய் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட உலகத் தலைவர்களையும் விட்டு வைக்கவில்லை.
அந்த வகையில், கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு ஆளான ரஷ்யப் பிரதமர் மிகைல் மிஷுஸ்தின் பூரண குணமடைந்து மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார்.
தான் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கடந்த மாதம் ஏப். 30ஆம் தேதி மிகைல் தாமாகவே முன்வந்து அறிவித்தார். இதையடுத்து, மிகைலை மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைப் பெற்று வந்த வேளையிலும் காணொலி காட்சி மூலம் அவர் பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டார்.
பிரதமர் பணிக்கு மிகைல் திரும்பியது குறித்து அவரது செய்தித்தொடர்பாளர் போரிஸ் பெலாகோவ் கூறுகையில், "மிகைல் மிஷுஸ்தின் பூரண குணமடைந்து மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார். இன்று காலை காணொலி காட்சி மூலம் அரசு அலுவலர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்" எனக் கூறினார்.
கோவிட்-19 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வரும் ரஷ்ய மருத்துவர்களுக்கு போனஸ் தருவது குறித்து, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினிடம், பிரதமர் மிகைல் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகி வருகிறார்.
ரஷ்யாவில் இதுவரை இரண்டு லட்சத்து 99 ஆயிரத்து 941 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இரண்டு ஆயிரத்து 722 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க : மே 31 வரை சென்னை அம்மா உணவகங்களில் 3 வேளை உணவு இலவசம்!