உலகையே பீடித்து வரும் கோவிட்-19 நோயை தடுக்க ஊரடங்கை அமலப்படுத்துவது, முகக் கவசங்களை அணியச் செய்வது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்துவது என மக்களைப் பாதுகாக்க உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
ஆனால், பொதுமக்களை விட கோவிட்-19 நோயாளிகளை நேரடியாகக் கையாளும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் நோய்ப் பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதுவும், கவச உடைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள சூழலில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டே அவர்கள் பணியாற்றுகிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
இவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்தை ஊர்ஜிதப்படுத்தும் வகையில், ரஷ்யாவில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்படும் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வாரத்தில் மட்டும், அந்நாட்டு தலைநகர் மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ் பெர்க் நகரில் 200-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கோவிட்-19 தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், ரஷ்யா முழுவதும் இதுவரை எத்தனை மருத்துவர்களுக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சரிடம் கேட்டபொழுது அவர் பதிலளிக்கவில்லை.
அந்நாட்டில் இதுவரை 450 மருத்துவப் பணியாளர்கள் கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 11 மருத்துவர்கள், ஐந்து செவிலியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் ரஷ்ய ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது.
ரஷ்யாவில் இதுவரை 87 ஆயிரம் பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நோயால் இதுவரை 800 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என பலர் சந்தேகிக்கின்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட ரேபிட் கிட்கள் தரமற்றதா? - சீனா விளக்கம்