கடந்த 27 ஆம் தேதி நாட்டு மக்களிடையே உரையாற்றிய இந்திய பிரதமர் மோடி, 3 நிமிடங்களில் செயற்கைக்கோளை தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணை சோதனை வெற்றியடைந்துள்ளது என கூறினார். மேலும், இந்த மிஷன் திட்டத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை பூமியில் இருந்து 1000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செயற்கைக்கோளை துல்லியமாக ஆழிக்கும் என்றும் தெரிவித்தார்.
இதனை உறுதி செய்த டி. ஆர். டி. ஒ தலைவர் சத்தீஷ் ரெட்டி, ஒடிசாவின் பாலசோர் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டதாக கூறினார். இதன் மூலம், இந்த தொழில்நுட்பத்தை வைத்துள்ள நான்காவது நாடாக இந்திய திகழ்கிறது என பெருமிதம் தெரிவித்தார்.
இந்த சோதனைக்கு பல்வேறு நாடுகளும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இதனை வரவேற்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், " இந்தியாவின் ஏவுகணை தாக்குதல் ஆயுதமற்ற விண்வெளியை உருவாக்குவதற்கு உதவியாக இருக்கும். அமெரிக்காவின் ஆயுத பயன்பாட்டை ரஷ்யா எதிர்க்கிறது. இதனை அமெரிக்கா முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மேலும், ரஷ்யா - சீனா இடையே ஏற்பட்டுள்ள ஆயுதமற்ற விண்வெளியை பாதுகாக்கும் ஒப்பந்தத்தின் படி, இதில் இந்தியா இணைய வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.