மாஸ்கோ: ஆப்கானில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலிபான்களுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையே போர் நடைபெற்றுவருகிறது. இதற்கிடையில், ஆப்கான் அரசுக்கு ஆதரவாக இருந்த அமெரிக்கா தனது நேட்டோ படைகளை, ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் முழுவதுமாக திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது.
அதன்படி, தற்போது 90 விழுக்காட்டிற்கும் அதிகமான அமெரிக்க படைகள் திரும்பப்பெறப்பட்டன. இது, தலிபான்களுக்கு சாதகமாக மாறியுள்ளது. நாட்டின் 90 விழுக்காட்டுப் பகுதியை கைப்பற்றியுள்ளதாக தலிபான்கள் அண்மையில் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் எல்லைப்பகுதிகளை கைப்பற்றி தலிபான்கள் தங்கள் படைகளை நிலை நிறுத்திவருகின்றன.
ரஷ்யா-தஜிகிஸ்தான் உறவு
இந்தச் சூழ்நிலையில், தஜிகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லைக்கு ரஷ்யா தனது ராணுவ உபகரணங்களை அனுப்பியுள்ளது. தஜிகிஸ்தானுக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் நல்லுறவு இருந்துவருகிறது. தலிபான்களால் தகிஸ்தானுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுக்க 6,000 ரஷ்ய ராணுவ வீரர்கள் தஜிகிஸ்தானில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
"எங்கள் நட்பு நாட்டுக்கு எதிரான அத்துமீறல்கள், ஆக்கிரமிப்புகளை தடுக்க ஆப்கானிஸ்தானுடன் தஜிகிஸ்தானின் எல்லையில் உள்ள ரஷ்ய ராணுவத் தளத்தின் திறன்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை நாங்கள் செய்வோம்" என கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உஸ்பெகிஸ்தான்-ரஷ்ய கூட்டு பயிற்சி
இவை ஒருபுறம் இருக்க, ஆப்கானிஸ்தானுடன் 144 கி.மீ தூரம் எல்லையை பகிர்ந்து கொள்ளும் உஸ்பெகிஸ்தானும் தலிபான்களின் அச்சுறுத்தல்களை தடுக்க சில நடவடிக்கைகளை எடுக்கவுள்ளன. இன்னும், சில நாள்களில் ஆப்கானிஸ்தான் எல்லையருகே ரஷ்யாவுடன் இணைந்து ராணுவ கூட்டுப் பயிற்சியை உஸ்பெகிஸ்தான் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: ஆப்கான் அரசுக்கு ஆதரவாக வான் தாக்குதல் நடத்திய அமெரிக்கா