வடமேற்கு ரஷ்யாவில் அர்கன்ஜெல்ஸ் என்ற பகுதியின் அருகே அமைந்துள்ள ராணுவ தளத்தில் நேற்று முன்தினம் பயங்கர சத்தத்துடன் கூடிய வெடிவிபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து ரஷ்யாவின் அணுசக்தி முகமையான ரசாட்டோம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏவுகணைக்குத் தேவையான திரவ உந்துசக்தி தெழில்நுட்பத்தில் இயங்கும் இயந்திரம் ஒன்றை சோதனையிட்டோம். அப்போது எதிர்பாராத விதமாக அந்த இயந்திரம் வெடித்து சிதறியது. இதில், ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் காயமடைந்தனர், காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்து ஏற்பட்ட இடத்துக்கு அருகே உள்ள அர்கன்ஜெல்ஸ், செர்வெரோட்வின்ஸ் ஆகிய நகரங்களில் இயல்பைவிட அதிகமான கதிர்வீச்சு அளவுகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, அணுக் கதிர்வீச்சிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் அயோடின் மாத்திரைகளை அதிக அளவில் வாங்கியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால், இந்த விபத்தில் அபாயகரமான எந்த கதிர்வீச்சும் ஏற்படவில்லை என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.