கனடா: இந்தியாவிலுள்ள பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த ராஜ் சவுகான், தற்போது கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதிக்கு சபாநாயகர் ஆகியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், "தான் கடந்துவந்த பாதையை விளக்குவது அவ்வளவு எளிதானது அல்ல எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “பஞ்சாப் மாநிலத்திலுள்ள கவுகார் கிராமம் எனது சொந்த ஊர். அங்கிருந்து கடந்த 1973ஆம் ஆண்டு கனடாவிற்கு குடிபெயர்ந்தேன். நான் ஒரு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என எண்ணியதே இல்லை. ஏனெனில் நான் சிறிய சமூக கட்டமைப்பிலிருந்து வளர்ந்தவன். அதுமட்டுமின்றி, என்னுடைய இளமைப் பருவத்தில் நிறவெறியும் தலைதூக்கி நின்றது. ஆனால் இன்று எங்களது முன்னோர் வகுத்த பாதையில் செயல்பட்டு இந்த உயரத்தை எட்டியுள்ளேன்.
ஒவ்வொரு நபரின் உரிமைகளுக்காகவும், பாகுபாடு மற்றும் சமத்துவமின்மையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகவும் எனது வாழ்க்கையை செலவிட்டேன், எங்கள் சட்டப்பேரவை நியாயமான முறையில் செயல்படுவதை உறுதி செய்து, அதன் மூலம் பிரிட்டிஷ் கொலம்பியா மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய விரும்புகிறேன்" என்றார்.
சமத்துவத்தை வலியுறுத்திய வழக்கறிஞராக அறியப்பட்ட சவுகான், கனடா விவசாய தொழிலாளர் சங்கத்தின் நிறுவனத் தலைவராக உள்ளார். அவர் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள மருத்துவமனை ஊழியர் சங்கத்திலும் செயல்பட்டுவருகிறார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பஞ்சாபி சீக்கியர், இந்தியாவிற்கு வெளியே உலகளவில் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.
சவுகானைத் தவிர, பிரிட்டிஷ் கொலம்பியா அமைச்சரவையில் நான்கு இந்திய-கனடிய அமைச்சர்களும் உள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியாவின் மக்கள் தொகையில் சுமார் 3.5 மில்லியன் பேர் இந்தோ-கனடியர்களாக உள்ளனர்.
சவுகானைப் போலவே, உஜ்ஜல் டோசன்ஜும் 2000ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கனடாவின் முதல் வெள்ளையர் அல்லாத பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு புதிய வரலாற்றை உருவாக்கினார். அவருக்கு முன்னதாக, பிரிட்டிஷ் கொலம்பியாவின் மன்மோகன் 'மோ' சிஹோட்டா 1986ஆம் ஆண்டில் கனடாவிலும், மேற்கத்திய நாடுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் என்ற வரலாற்றை ஏற்படுத்தினார்.
இதையும் படிங்க: ’இந்த வெற்றி அமெரிக்க மக்களுக்கு கிடைத்த புதிய விடியல்’: கமலா ஹாரிஸ்