புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பெக்கட் என்ற சிறுவனையும், அவனது அக்காவையும் குறித்து அவர்களது தாய் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள கருத்தும், அதிலுள்ள புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
இது தொடர்பாக சிறுவனின் தாய் பெக்கட் பதிவிட்டுள்ளதாவது, "என் மகளும், மகனும் மிகவும் அன்பாகவும், ஆதரவாகவும் இருப்பார்கள். ஒரு நாள் என் மகள் ஆப்ரி, நான்கு வயதே நிறைந்த அவளது தம்பியை ஆம்புலன்ஸில் அழைத்து செல்வதைப் பார்த்து அதிர்ச்சியானாள். மருத்துவமனையில் அவளது தம்பியை ஒரு படைசூழ மருத்துவர்கள் ஊசி போடுவதும், மருந்து கொடுப்பதையும் பார்த்து திகைத்து நின்றாள். தம்பிக்கு என்ன ஆனது என்றெல்லாம் அவள் கேட்கவில்லை. ஆனால், துறுதுறுவென விளையாடும் அவளது தம்பிக்கு ஏதோ ஒன்று தவறுதலாக உள்ளது என்பதை மட்டுமே உணர்ந்தாள்.
பின்னர் ஒரு மாதம் கழித்து வீடு திரும்பிய பெக்கெட், முன்போல் விளையாட முடியவில்லை. வெளியில் வர இயலவில்லை. படுக்கையில் அமர்ந்தபடியே இருக்கிறான். அவனது நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்கிறது என்பதை உணர்ந்தவள், அன்றிலிருந்து இன்றுவரை தம்பிக்காக துணை நிற்கிறாள். அவனுக்காக அனைத்தையும் தியாகம் செய்கிறாள். அவன் விளையாடும் போது வாந்தி எடுத்தால் அவனது அருகிலேயே இருந்து அவனை ஆறுதலாக பார்த்துக் கொள்கிறாள். இருவரும் ஒருவர் மேல் ஒருவர், முன்பை விட அதிகம் பாசம் வைத்திருக்கிறார்கள். முன்பு எப்போதும் செல்லும் பூங்காவிற்கு ஏன் செல்லவில்லை, தம்பி ஏன் பள்ளிக்கு வரவில்லை; இதுபோல் எந்த கேள்விகளும் ஆப்ரி கேட்கவில்லை.
அதற்கு மாறாக தம்பிக்காக துணை நிற்கிறாள், நோயால் அவதிப்படும் குழந்தையின் மீது அதீத அன்பு வைத்தாள். மற்ற குழந்தைகளிடம் இருந்து தன் தம்பி ஒதுங்கி இருக்கக்கூடாது. முக்கியமான ஒன்று எந்த சூழ்நிலையிலும் பாதிக்கப்பட்ட குழந்தையை தனித்துவிடக்கூடாது என்பதில் மட்டும் சரியாகவும், சீராகவும் நடந்து கொண்டாள் மகள் ஆப்ரி. என்னை விட ஆப்ரி அவளது தம்பியை மிகவும் அக்கறையோடு பார்த்துக் கொண்டாள். அவளுடைய மொத்த அன்பையும் தம்பிக்கு கொடுத்தாள். தம்பி தூங்கி எழும் போது அருகில் நிற்பது, என்றுமே அவன் கூடவே இருப்பது. இதுவே குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படும் போது நடக்கும் உண்மை" இவ்வாறு அவர் கூறியிருந்தார்.