கொழும்பு (இலங்கை): 2019ஆம் ஆண்டில் நடந்த பயங்கர ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்பு தாக்குதல்களால் பேரழிவிற்குள்ளான மூன்று தேவாலயங்களில் ஒன்றான வடக்கு கொழும்பில் உள்ள செயின்ட் அந்தோணி தேவாலயத்திற்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ சென்றார்.
பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் தொடர்புடைய உள்ளூர் இஸ்லாமிய பயங்கரவாத குழு நேஷனல் தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஒன்பது தற்கொலைப் படையினர், 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகை அன்று மூன்று தேவாலயங்கள், பல சொகுசு தங்கு விடுதிகளில் தாக்குதலை நடத்தினர். இதில் 11 இந்தியர்கள், ஐந்து அமெரிக்கர்கள் உள்பட 258 பேர் கொல்லப்பட்டனர்.
இது குறித்து ட்வீட் செய்துள்ள மைக் பாம்பியோ, "இன்று, நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று காயப்படுத்திய 2019 குண்டுவெடிப்பு தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட புனித அந்தோணி ஆலயத்தில் அஞ்சலி செலுத்தினேன். வன்முறை, பயங்கரவாதத்தை தோற்கடித்து குற்றவாளிகளை நீதிக்கு முன் கொண்டுவர இலங்கையுடனும், உலக மக்களுடனும் துணை நிற்போம்” என்று பதிவிட்டிருந்தார்.