சீனாவில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்று நாளடைவில், அந்நாட்டில் குறைந்திருந்தாலும் தற்போது மற்ற நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,356 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57,705ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் அதிகபட்சமாக சிந்த் மாகாணத்தில் 22,934 பேரும், பஞ்சாப் மாகாணத்தில் 20,654 பேரும், கைபர் பக்துன்வா மாகாணத்தில் 8,080 பேரும், பலூசிஸ்தான் மாகாணத்தில் 3,468 பேரும், தலைநகர் இஸ்லாமபாத்தில் 1,728 பேரும், கில்கித் பல்திஸ்தானில் 630 பேரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 211 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம் இப்பெருந்தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 30 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், நாட்டில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,197ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 18,314 பேர் இத்தொற்றிலிருந்து முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நேற்று (மே 25) ஒரே நாளில் நாடு முழுவதும் 7,252 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம், பாகிஸ்தானில் இதுவரை 4,90,908 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, நாட்டில் அதிகரித்துவரும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானுக்கு ஜப்பான், துருக்கி, அரசுகள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.
இதையும் படிங்க: கட்டுப்பாட்டு அறையின் எச்சரிக்கையைப் புறக்கணித்த விமானியே விபத்துக்குக் காரணம்!