ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி அளித்த அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு ஆகஸ்ட் 5ஆம் தேதி ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டது. பின்னர், அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியது. அதன்படி, கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தேதி அதிகாரப்பூர்வமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது.
இதையடுத்து, திருத்தம் செய்யப்பட்ட இந்தியா வரைபடத்தை மத்திய அரசு நவம்பர் 2ஆம் தேதி வெளியிட்டது. சிறப்புச் சட்டம் 370 நீக்கம் செய்யப்பட்டது முதலே இந்தியாவை வன்மையாகக் கண்டித்துவரும் அண்டை நாடான பாகிஸ்தான், மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த புதிய வரைபடங்களை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என தற்போது கருத்து தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில்,"ஐநா-வின் விருப்பத்திற்கு ஒவ்வாத வகையில் இந்தியா வெளியிட்டிருக்கும் புதிய வரைபடம் ஏற்புடையதல்ல. ஜம்மு-காஷ்மீரில் இந்தியா மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும் அப்பிராந்தியத்தின் தகுதியை மாற்றப்போவதில்லை" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரை சர்வதேச பிரச்னையாக்க பாகிஸ்தான் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததென்பது குறிப்பிடத்தக்கது. ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் உள்நாட்டுப் பிரச்னை என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது.
இதையும் படியுங்க : 'காஷ்மீர் மக்களுக்கு நடப்பது நாளை உங்களுக்கும் நடக்கலாம்' - எச்சரிக்கும் முன்னாள் ஐஏஎஸ்
!