ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு கடந்த 5ஆம் தேதி நீக்கியது. மேலும், அம்மாநிலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான், இந்தியாவுடனான தூதரக, வணிக உறவுகளைத் துண்டித்துக் கொண்டதுடன், காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகளின் ஆதரவை தன்வசப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன.
அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் காஷ்மீர் பிரச்னையை இருதரப்பு பிரச்னை என தெரிவித்துள்ளன. இருப்பினும் உலக நாடுகளின் ஆதரவைப் பெற பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சித்துவருகிறது. இந்நிலையில், கைபர்-பக்துன்வாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், " காஷ்மீரின் தூதராக என்னை நானே நியமித்துக்கொள்கிறேன். காஷ்மீரிகளின் சுதந்திரத்துக்காக இறுதிவரை போராடுவேன்.
காஷ்மீர் குறித்து அனைத்து உலக அரங்கிற்கும் கொண்டு செல்வேன். காஷ்மீருக்காகத் தொடர்ந்து போராடுவேன், அவர்களுடன் துணை நிற்பேன். பிரதமர் மோடி தன்னுடைய நகர்வுகளை முடித்துக்கொண்டார். இது என்னுடைய முறை. காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்கும் நமது முயற்சியில் வெற்றி கண்டுள்ளோம். 1965ஆம் ஆண்டிற்கு பிறகு காஷ்மீர் விவகாரத்தை முதன்முறையாக ஐநா சபை ஆலோசித்தது. சர்வதேச ஊடகங்கள் இதுகுறித்து பேசிவருகின்றன" என்றார்.