பாகிஸ்தானின் சிந்து மாகாணம் மாதியாரி மாவட்டத்தில் உள்ள ஹாலா நகரில் மாதரி பாய் என்ற இந்து பெண்ணுக்கு கடந்த சனிக்கிழமை திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது, திருமண மண்டபத்துக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத சில நபர்கள் மாதரி பாயை கடத்திச் சென்றுள்ளனர். பின்னர், அவரை வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மதமாற்றம் செய்து, ஷா-ருக்-குல் என்ற இஸ்லாமியருடன் திருமணம்செய்துவைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அப்பெண்ணின் பெற்றோர் புகாரளித்தும் கடத்தல்காரர்கள் மீது காவல் துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், மாதரி பாயை கடத்துவதற்கு காவல் துறையினர் உதவியதாகவும் புகார் எழுந்துள்ளது.
கடந்தாண்டு ஆகஸ்டர் மாதம், 19 வயதான ஜகஜித் கவுர் என்ற இந்து பெண் மாயமானார். சில நாள்களுக்குப் பிறகு, அந்தப் பெண் கடத்தப்பட்டதாகவும், வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்து இஸ்லாமியர் ஒருவருடன் திருமணம் செய்துவைத்ததாகவும் அதிர்ச்சியூட்டும் செய்தி வெளியானது.
இதுபோன்று, பகவான் சிங் என்ற சீக்கிய மத குருவின் மகள் துப்பாக்கி முனையில் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்ட சம்பவம் இந்தியாவில் வாழும் சீக்கியர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானில் இந்து உள்ளிட்ட சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த பெண்கள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம், வலுக்கட்டாய திருமணம் செய்துவைக்கும் சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்ற வண்ணம் உள்ளன.
இதையும் படிங்க : ஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் விபத்து !