1986ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில முதலமைச்சராக நவாஸ் ஷெரீப் இருந்தபோது, நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஊழல் செய்ததாக வழக்கு நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கு பாகிஸ்தான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக ஜாங்/ஜியோ மீடியா குழுமத்தின் உரிமையாளர் மிர் ஷகிலூர் ரஹ்மான் என்பவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் வழக்கின் விசாரணைக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் முன்னிலையாகவில்லை.
இதைப்பற்றி காவல் துறையினர் நீதிபதிகளிடம் கூறுகையில், ''நவாஸ் ஷெரீப் அவரது வீட்டில் இல்லாததால் நீதிமன்றத்தின் அழைப்பாணையை அவரிடம் கொடுக்க முடியவில்லை'' என்றனர்.
நீதிபதி ஆசாத் அலி, நீதிமன்றத்தின் அழைப்பாணையை இங்கிலாந்தில் உள்ள நவாஸ் ஷெரீப்பின் வீட்டிற்கு அனுப்ப உத்தரவிட்டார்.
இதனிடையே மிர் ஷகிலூர் ரஹ்மானின் நீதிமன்றக் காவல் செப். 3ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது.
அல் ஆசியா ஊழல் வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவந்த நவாஸ் ஷெரீப், உடல்நிலை மோசமானதன் காரணமாக லண்டனில் சிகிச்சைப் பெறுவதற்காகப் பிணையில் சென்றார்.
இதனைத் தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு முன்னதாக நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் உயர் நீதிமன்றத்தில் தனது மருத்துவச் சான்றிதழைத் தாக்கல்செய்தார். அதில், ''கரோனா பரவல் தீவிரமடைந்துவருவதால், மருத்துவர்கள் என்னை பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். அதனால் என்னால் நாடு திரும்ப முடியவில்லை'' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நவாஸ் ஷெரீப்பிற்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: சீனாவுடன் உறவை வலுப்படுத்தும் பாகிஸ்தான் - ஆசியாவில் அரசியல் மாறுமா?