காபூல் : ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பாதுகாப்பு படையினர் இடையேயான மோதல் 20க்கும் மேற்பட்ட மாகாணங்களில் நடைபெற்றுவருகிறது.
இந்தத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள், இராணுவத்தினர், துணை ராணுவ பாதுகாப்பு படையினர் என பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்திய புகைப்பட பத்திரிகையளர் டேனிஷ் சித்திகி கொல்லப்பட்டார்.
இதற்கிடையில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் கடந்த 4 நாள்களில் 950க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதிலும் தலிபான் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து சோர்க்-இ-பார்சா என்ற மாவட்டத்தையும் கடந்த 12 மணி நேரத்தில் பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர்.
இது குறித்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு படைகளின் செய்தித் தொடர்பாளர் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 18) கூறுகையில், “ கடந்த 4 நாள்களில் இதுவரை 967 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு மாகாணமான தகார் நகரில் உள்ள தாலுகான் புறநகரில் கடும் மோதல்கள் பதிவாகியுள்ளன, கடந்த இரண்டு வாரங்களாக இந்த நகரம் தலிபான்களால் பிடியில் இருந்தது. பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமடைந்து வருகிறது. கடைகள் மூடப்பட்டுவிட்டன. மோர்ட்டார் ரக துப்பாக்கிக் குண்டுகளை கொண்டு தலிபான்கள் தாக்குதல் நடத்திவருகின்றனர். இதில் குடியிருப்பாளர்களின் வீடுகள் சேதமடைந்துள்ளன” என்றார்.
இதையும் படிங்க : தானிஷ் சித்திக் உடல் ஜாமியா பல்கலைக்கழகத்தில் அடக்கம்