மார்ச் 15 ஆம் தேதி நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் நகரில் இரண்டு மசூதிகளில் நடத்தப்பட்ட சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நியூசிலாந்தின் துப்பாக்கிச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் ஜெசிந்தா தெரிவித்திருந்தார். அதன்படி, தானியங்கி ராணுவ ரக துப்பாக்கிக்கு ஜெசிந்தா தடை விதித்து உத்தரவிட்டார். இதற்கிடையே, பலியானோரின்உடல்களை அடக்கம் செய்யும் பணியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடைபெற்ற அல்நூர் மசூதிக்கு அருகே திரண்ட ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் மல்க உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் இஸ்லாமிய சமூகத்தினர் மத்தியில் பேசிய அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா, "உங்களுடைய துக்கத்கில் நியூசிலாந்து பங்கெடுத்து கொண்டுள்ளது. உங்களுக்கு உறுதுணையாக நாங்கள் உள்ளோம்" என்று உருக்கமாக தெரிவித்தார்.
இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரெண்டன் டாரன்ட் என்பவர் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி கிறிஸ்ட் சர்ச் மாவட்ட நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.