சீனாவின் வூஹான் மாகாணத்தில் தோன்றிய கரோனா வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 900த்தை தாண்டியுள்ளது. 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் சீன அரசு சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், சீனாவின் ஹெனன் மாகாணத்தில், கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் செவிலி ஒருவர், பாதுகாப்பு உடைகளுடன் சில மீட்டர் தொலைவில் நின்றபடி தனது மகளைப் பார்வையிடுகிறார். அப்போது மகளை நோக்கி கைகளைக் கொண்டு அணைப்பது போல் சைகை செய்கிறார்.
தூரத்தில் அந்த செவிலியின் மகள், 'ஐ லவ் யூ, ஐ மிஸ் யூ அம்மா' என்கிறார்.
இதையடுத்து காற்றில் மகளைக் கட்டி அணைப்பது போல், அந்த செவிலியும் தனது மகளைக் கட்டி அணைக்கிறார். இதையடுத்து மகள் கொண்டு வந்த உணவை எடுத்துகொண்டு அந்த செவிலித்தாய் அழுதபடியே செல்கிறார். கரோனா பாதிப்பால் சிகிச்சையளிக்கப்பட்டு வரும், நோயாளிகளுக்குப் பணிவிடை செய்வதால் செவிலியும் குழந்தையும் தொடர்ந்து சில நாட்களாக சந்திக்கமுடியாத நிலை இருப்பதாகத் தெரிகிறது. மேலும் சிறுமிக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் வாய்ப்பு இருப்பதால், மருத்துவர்கள் இருவரையும் தூரத்திலேயே சந்தித்துக்கொள்ள அனுமதியளித்தனர். அப்போது சிறுமியும் செவிலித்தாயும் அழுத நிகழ்வு, கல்நெஞ்சம் கொண்டோரையும் கலங்கச் செய்யும் வண்ணம் இருந்தது.
இதையும் படிங்க : கரோனா வைரஸ் உயிரிழப்பு எண்ணிக்கை 908 ஆக உயர்வு!