கோவிட்-19 தாக்கம் உலகெங்கும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தத் தொற்று குறித்து அறிந்துகொள்ள உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, கரோனா வைரஸ் மனிதர்களின் தோலில் சுமார் ஒன்பது மணி நேரம் வரை உயிருடன் இருக்கும் என்று ஜப்பானில் உள்ள கியோட்டோ ப்ரிபெக்சுரல் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சாதாரண காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ்கள் வெறும் இரண்டு மணி நேரம் வரை மட்டுமே மனிதர்கள் தோலில் உயிருடன் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைவிட சுமார் நான்கு மடங்கு அதிக நேரம் கரோனா வைரஸ் மனிதர்களின் தோலில் உயிருடன் இருக்கும் என்பதால், வைரஸ் பரவலின் வேகம் அதிகமாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்த ஆராய்ச்சி முடிவுகள் Clinical Infectious Diseases என்ற இதழில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், சானிடைசர்களை பயன்படுத்துவதன் மூலம் கைகளில் இருக்கும் கரோனா வைரஸை 80 விழுக்காடு வரை உடனடியாக அழிக்க முடிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கரோனா வைரஸ் எஃகு, கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் போன்ற இடங்களில் விரைவாக அழிந்துவிடுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
உலகெங்கும் இதுவரை 3.6 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கோவிட் 19 உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.