இது குறித்து வடகொரிய வெளியுறவுத் துறை மூத்த அலுவலர் கியோன் ஜோங் குன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அணு ஆயுத ஒழிப்பு குறித்து அமெரிக்காவுடன் நாங்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை. இதுகுறித்து தென் கொரியா மத்தியஸ்தம் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏனென்றால் மத்தியஸ்தம் செய்வதற்கான தகுதியை அந்நாடு இழந்துவிட்டது" எனக் கூறியுள்ளார்.
வடகொரியாவுக்கான அமெரிக்க அதிபரின் சிறப்புப் பிரதிநிதி ஸ்டீபென் பெய்கன், அரசு முறை பயணமாக நேற்று (ஜூலை 7) தென்கொரியா வந்திறங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னரே வடகொரியா இந்த அறிக்கையை வெளியிட்டது. ஸ்டீபென் பெய்கன் இந்த பயணத்தின் போது, வடகொரியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து தென் கொரிய அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
பின்னணி:
சர்ச்சைக்குரிய அணு ஆயுத திட்டங்களை வடகொரியா கைவிடச் செய்ய, மத்தியஸ்தம் என்ற பேரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கும் இடையே சிங்கப்பூரில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரலாற்றுச் சிறப்பு மிக்க உச்சி மாநாடு நடைபெற்றது. இதில், கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக்க வடகொரியா ஒப்புக்கொண்டது.
இதையடுத்து, இரண்டாவது முறையாக வியட்நாம் தலைநகர் ஹனாயில் இருவருக்கும் இடையே மீண்டும் ஒரு உச்சி மாநாடு நடைபெற்றது. ஆனால், கருத்துவேறுபாடு காரணமாக இது தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து, வடகொரியாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் முயற்சியில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் எந்த ஒரு ஆக்கப்பூர்வமான விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என அதிருப்தி தெரிவித்த வடகொரியா, தென் கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்து அந்நாட்டுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
இதையும் படிங்க : பிரேசில் அதிபருக்கு கரோனா!