பியோங்யாங்: வடகொரிய தலைவரும் அந்நாட்டின் அதிபருமான கிம் ஜாங் உன், உணவு நெருக்கடியை எதிர்க்கும் முயற்சியாக 2025ஆம் ஆண்டு வரை தனது நாட்டு மக்களை குறைவாக சாப்பிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். வடகொரியாவில் உணவுப் பொருள்கள் பற்றாக்குறையால், அந்நாட்டில் வசிக்கும் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் உணவுப் பொருள்களின் விலை கடுமையான உயர்ந்து வருகிறது.
இதற்கான காரணங்கள் குறித்து கிம் உன் தெரிவிக்கையில், “நாட்டில் விவசாய உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதில் சிக்கல் இருக்கலாம். விவசாயத் துறை அதன் தானிய உற்பத்தித் திட்டத்தை நிறைவேற்றத் தவறியதால் மக்களின் உணவு நிலைமை இப்போது பாதிக்கப்பட்டுள்ளது” என்றார்.
வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகள், கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் மற்றும் கடந்த ஆண்டு சூறாவளி ஆகியவற்றால் அந்நாட்டில் உணவுப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை ராணுவத்தினர் மேற்கொண்டனர். இந்த மழையின்போது பெருமளவு பொருள்கள் வீணாகின.
முன்னதாக இது தொடர்பாக ஏற்கனவே உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அரசுக்கு எச்சரித்துள்ளனர். மேலும், 2025ஆம் ஆண்டுக்கு முன்னர் வட கொரியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் சுங்கச்சாவடிகளை மீண்டும் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்றும் அலுவலர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள தெற்கு ஹம்கியோங்கில் நிலவும் ஆபத்தான நிலைமை குறித்தும் ராணுவம் விவாதித்துவருகிறது. அணுசக்தி, ஆயுதத் திட்டங்களைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சர்வதேசத் தடைகளால் வடகொரியா நாட்டின் பொருளாதாரம் நலிவடைந்துள்ளது. இந்த நெருக்கடிக்கு மத்தியில் ராணுவ சந்திப்பு நடந்துள்ளது.
ஏற்கனவே சென்ற ஏப்ரல் மாதம் அரசு அலுவலர்கள் மீது கிம் உன் கடும் சட்டங்கள் விதித்திருந்தார். அரசு வேலைகளிலிருந்து நீங்களாகவே ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கூறினார். இதற்கிடையில், வடகொரியா பஞ்சம் 1990களில் நிலவிய பஞ்சம் மற்றும் பேரழிவு காலத்துடன் இணைக்கிறது என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். வடகொரியாவில் கடந்த காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின்போது சுமார் 30 லட்சம் மக்கள் இறந்துள்ளனர்.
இந்த நிலையில் நாடு மீண்டும் ஒரு மோசமான பஞ்சத்தை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில் தான், அதிபர் கிம் ஜாங் உன் வெளிப்படையாக இது குறித்து பேசியுள்ளார். கடந்த காலங்களில் கிம் உன் தங்க டாய்லெட் பயன்படுத்துகிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. மேலும் நாட்டில் தொடர்ச்சியாக அணு சோதனை நடைபெற்றது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : பசித்தால் எடுத்துக்கொள்ளுங்கள்: ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்கும் தொண்டு நிறுவனம்!