அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் - வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோரிடையே ஏற்பட்ட நல்லுறவை அடுத்து, அணு ஆயுத ஒழிப்புப் பேச்சுவார்த்தையில் இரு நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளும் ஈடுபட்டனர். இரு நாடுகளுக்கும் பொதுவான ஒரு இடமாகத் தேர்வு செய்யப்பட்ட ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
தொடக்கத்தில் சுமுகமாக நடைபெற்றுவந்த இந்தப் பேச்சுவார்த்தை, இம்மாத தொடக்கத்தில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளினால் தடைபட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் புதிய திட்ட அறிக்கைகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க அமெரிக்கா முன்வர வேண்டும் என்று வட கொரியா கெடு விதித்துள்ளது.
வட கொரியா தொழிலாளர் கட்சியின் துணைத் தலைவர் கிம் யாங் சொல் (Kim Yong Chol) கூறுகையில், அமெரிக்காவின் முந்தைய பேச்சுவார்த்தைகள் ஒருதலைபட்சமாக இருந்ததாகவும், மற்ற நாடுகளிடம் இருந்து வட கொரியாவை தனிமைப்படுத்த அமெரிக்கா முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். அதேபோல், அணு ஆயுத ஒழிப்புப் பேச்சுவார்த்தையை தாமதப்படுத்துவது அமெரிக்கா செய்யும் தவறு எனவும் கிம் யாங் தெரிவித்துள்ளார்.
ஏனெனில், ஆணு ஆயுத ஒழிப்புப் பேச்சுவார்த்தை நிறைவடையும்வரை வட கொரியா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை நீடிக்கும். எனவே பேச்சுவார்த்தையை உடனடியாக முடிப்பது வட கொரியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என வட கொரியா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ட்ரம்ப்-கிம் சந்திப்பைத் தொடர்ந்து, மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு: பாம்பியோ