கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் பல முன்னணி நாடுகளே திணறி வருகின்றது. உலகளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. கரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் அனைத்து நாடுகளும் மும்முரமாக உள்ளனர். வைரசின் தோற்றம் குறித்து ஆராய்ச்சி செய்ய உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசர திட்ட இயக்குனர் டாக்டர் மைக்கேல் ரியான் கூறியதாவது, "கரோனா வைரஸ் தோற்றம் குறித்து ஆராய்ச்சி செய்வதற்கான அமைப்பை உருவாக்க சீன விஞ்ஞானிகளுடன் இணைந்து பணியாற்ற பிரத்யேக குழு ஒன்று சீனாவில் களமிறங்கியுள்ளது.
அவர்கள், தற்போது வரை நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளின் தரவுகள் குறித்து முதல்கட்டமாக ஆய்வு மேற்கொள்வார்கள். பின்னர், அந்த முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட ஆராய்ச்சி குறித்த திட்டத்தை வகுத்து சீன விஞ்ஞானிகளுடனும், சர்வதேச நிபுணர்களிடமும் இணைந்து பணியாற்றவுள்ளனர்" என்றார்.