நேபாளத்தில் 2008ஆம் ஆண்டு மன்னராட்சி நீக்கப்பட்டு, கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனநாயக ஆட்சி நடைபெற்றுவருகிறது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பிரதமராகத் தேர்வுசெய்யப்பட்ட கே.பி. ஷர்மா ஒலி 2018ஆம் ஆண்டிலிருந்து பொறுப்புவகிக்கிறார்.
அண்மையில் இந்தியாவை விமர்சிக்கும் வகையில், சில கருத்துகளைத் தெரிவித்த ஒலி, இந்திய எல்லைக்குட்பட்ட சில பகுதிகளை நேபாள எல்லைக்குப்பட்டதாகச் சித்தரித்து வரைபடம் வெளியிடுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஒலியின் இந்த நடவடிக்கைகள் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமரின் இந்த நடவடிக்கை அரசியல் ரீதியாகவும் சரி, ராஜாங்க ரீதியாகவும் சரி தவறான ஒன்று எனத் தெரிவித்த கட்சியின் நிலைக்குழு, அவரை ராஜிநாமா செய்யுமாறு வலியுறுத்திவருகிறது.
இதனிடையே, பிரதமர் ஒலியின் அரசியல் எதிர்காலம் குறித்து முடிவெடுப்பது தொடர்பாக நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழுக் கூட்டம் இன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்து. இந்நிலையில், இந்தக் கூட்டமானது ஜூலை 10ஆம் தேதிக்கு (வரும் வெள்ளிக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஒலியின் செய்தித்தொடர்பாளர் சூர்ய தப்பா அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க : இந்தியாவுடன் அமெரிக்க ராணுவம் துணை நிற்கும் - வெள்ளை மாளிகை