சமீப காலமாக, நேபாள நாட்டின் பிரதமர் ஷர்மா ஒலி பல்வேறு சர்ச்சையான கருத்துக்களைத் தெரிவித்துவருகிறார். இந்தியப் பகுதிகளை நேபாளத்துடன் இணைத்து சர்ச்சையைத் தொடங்கிய அவர், உச்சகட்டமாக இந்தியா தனது தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க நினைக்கிறது என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்தார். இதற்கு இந்தியத் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் ஒலியின் இந்தத் தொடர் சர்ச்சைப் பேச்சுகளால் சொந்தக் கட்சிக்குள்ளேயே அதிருப்தி நிலவிவருகிறது. அதன் வெளிப்பாடாக அவர் பதவி விலக வேண்டும் என்ற குரலும் வலுத்துவருகிறது.
இன்று தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்ற நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் கலந்துகொண்ட 44 நிலைக்குழு உறுப்பினர்களில் 31 பேர் ஒலிக்கு எதிராகக் குரல் எழுப்பியுள்ளனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மூத்தத் தலைவர்களான மாதவ், ஜல்நாத் கானல், பாம்தேவ் கௌதம், புஷ்பா கமல் தஹால் ஆகியோர், ஒலி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு பதவி விலக வேண்டும் அல்லது இந்தியா மீது அவர் வைக்கும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக ஜல்நாத் கானல் கூறுகையில், ”கட்சி நலனைக் கருத்தில்கொள்ளாமல் ஒலி சுயநலமாகச் செயல்பட்டுவருகிறார். பொதுவுடைமைக் கொள்கைகளை விட்டுவிட்டு, அவர் முதலாளித்துவக் கொள்கைகளைக் கையிலெடுத்துள்ளார்” என்று குற்றஞ்சாட்டினார்.
கட்சி நடத்திய கூட்டத்தில் பங்கேற்காத ஒலி, குடியரசுத் தலைவர் பித்யா தேவி பண்டாரியைச் சந்திக்கச் சென்றார். இத்தைகைய பரபரப்பான அரசியல் சூழலில் இன்று நாட்டு மக்களிடம் அவர் உரையாற்றுவார் என்றும், அப்போது தன்னுடைய ராஜிநாமா முடிவை அறிவிப்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால், இப்போது வரை அவர் உரையாற்றவில்லை.
இதையும் படிங்க: பெற்றோர் கண் முன்னே காவலரைக் கொன்ற நக்சல்கள்!