மியான்மரில் கரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி உள்பட 90-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. இருப்பினும் தேர்தல் முடிவுகளை முழுமையாகத் தெரிவிக்க ஒரு வாரம் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாகவும் அதேசமயம் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காது என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 642 இடங்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 346 இடங்களை அந்த கட்சியினர் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், தேர்தலில் வெற்றிபெற்ற ஆங் சான் சூகி, அவரது கட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். முன்னதாக, 2015இல் நடந்த பொதுத் தேர்தலில் தற்போது ஆளும் என்.எல்.டி. கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் வென்றது குறிப்பிடத்தக்கது.