ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் கிழக்கு பிராந்திய பொருளாதார மாநாடு நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் தலைமை அழைப்பாளராக கலந்துகொள்ளமாறு ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் விடுத்த அழைப்பின்பேரில், பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக ரஷ்யா சென்றுள்ளார்.
பிரதமர் மோடி விமானம் மூலம் இன்று அதிகாலை விளாடிவோஸ்டாக் நகரைச் சென்றடைந்தார். அவருக்கு, ரஷ்ய வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து, ரஷ்ய அதிபர் புடினை சந்தித்துப் பேசிய பிரதமர் கப்பல் மூலம் ரஷ்யாவின் மிகப் பெரிய கப்பல் தயாரிப்பு துறைமுகமான 'ஸவெஸ்டா'-வுக்கு சென்று, அங்கு நடைபெறும் பணிகளைப் பார்வையிட்டார்.
ரஷ்யா-இந்தியா இடையே கப்பல் தயாரிப்புத் துறையில் கூட்டுறவை ஏற்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாக்கும்.
இதுகுறித்து பிரதமர் மோடி பதிவிட்டிருந்த ட்வீட்டில், " (ஸவெஸ்டா) துறைமுகத்தில் உள்ள அதிநவீன தொழில்நுட்பங்களை அதிபர் புடின் எனக்கு காட்டினார். இந்த சந்திப்பு இருநாடுகளுக்கு இடையே புதிய கூட்டுறவு மலர வழிவகை செய்யும்" எனத் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, கிழக்கு பிராந்திய பொருளாதார மாநாட்டின் ஒருபகுதியாக அமையவுள்ள 20-வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் இருநாட்டுத் தலைவர்களும் பங்கேற்றுப் பேசினர்.