பாகிஸ்தானில் ஆளும் இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தின. அண்மையில், பாகிஸ்தான் முன்னாள் முதலமைச்சர் நவாஸ் ஷெரிஃபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி உள்ளிட்ட நான்கு முன்னணி எதிர்க்கட்சிகள், கராச்சியில் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தின.
முன்னாள் பிரமதரான நவாஸ் ஷெரிஃப் மீது ஊழல் புகார் முன்வைத்து அவரைக் கைது செய்து சிறையில் தள்ள பாகிஸ்தான் அரசு முயற்சி செய்து வருகிறது. தனது உடல்நிலையை காரணம் காட்டி லண்டனில் அடைக்கலம் புகுந்துள்ள நாவஸ், கராச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் காணொலி மூலம் பங்கேற்று உரையாற்றினார். நவாஸின் மகளும், அவரது கட்சியின் துணைத் தலைவருமான மரியம் நவாஸ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், அரசு, தற்போதைய ராணுவத் தளபதி உள்ளிட்டோருக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டன.
இந்நிலையில், இந்தக் கூட்டம் முடிந்த பின்னர் நள்ளிரவில் மரியம் நவாஸ் தங்கியிருந்த இடத்திற்குள் நுழைந்த பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர், அவரது கணவர் கேப்டன் முகமது சஃப்தாரை கைது செய்தனர்.
இந்த கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மரியம் நவாஸ், எதிர்க்கட்சிகளின் பலத்தைக் கண்டு பொறுக்க முடியாத இம்ரான் அரசு, எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தவே இது போன்ற முறை செயல்களில் ஈடுபடுகிறது எனக் குற்றம் சாட்டியுள்ளார். ஏற்கனவே மரியம் நவாஸின் கணவர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், மரியம் நவாஸ் மீதும், மேலும் சில எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதும் அந்நாட்டு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்ட போலந்து தேசிய ஸ்டேடியம்!