லாகூர் நகரிலிருந்து 91 பயணிகள், எட்டு ஊழியர்கள் என மொத்தம் 99 பேருடன் புறப்பட்ட பாகிஸ்தான் அரசின் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பிகே 8303 பயணிகள் விமானம் கராச்சி குடியிருப்புப் பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணத்த 97 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்த விமான விபத்துக்கான காரணம் குறித்து வெளிப்படையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி சிந்த் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நேற்று இந்த மனு நீதிபதிகள் முகமது அலி மஸார், யூசஃப் அலி சயீத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, விபத்து குறித்து ஏற்கனவே நடைபெற்று வரும் விசாரணை அறிக்கை எப்போது வெளியிடப்படும் என அரசு தரப்பில் ஆஜரான அந்நாட்டின் துணை தலைமை வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு அவர், ஜூலை 22ஆம் தேதி வெளிப்படும் என்றும் பிரதமர் இம்ரான் கான் உத்தரவின் படி அது பொதுத்தளத்தில் வெளிப்படும் என பதிலளித்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "விபத்துக்குள்ளான விமானத்தை யார் வாங்கியது, ஏன் வாங்கப்பட்டது. அதனை பாராமறிக்காமல் விட்ட காரணம் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பதிலளிக்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே நடைபெற்றுவரும் விசாரணை முடிவுகள் வெளியான பிறகே இம்மனுவை விசாரிக்க முடியும் எனக் கூறி, விசாரணையை ஜூன் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க : கட்டுப்பாட்டு அறையின் எச்சரிக்கையைப் புறக்கணித்த விமானியே விபத்துக்குக் காரணம்!