ஜப்பானின் டோக்கியோ நகரை ”ஹகிபிஸ்” புயல் கடந்த சனிக்கிழமை கடுமையாகத் தாக்கியது. இந்த புயலானது தற்போது தலைநகர் டோக்கியோவுக்கு தென்மேற்கு தீபகற்பத்தில் கரையை கடந்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த காற்றுடன் மழை கொட்டித் தீர்த்தது. கனமழையாலும், சூறைக்காற்றாலும் பல வீடுகள் சேதமடைந்து பொதுமக்கள் உடைமைகளை இழந்துள்ளனர்.
ஜப்பான் அரசு 27 ஆயிரம் ராணுவப் படைகளை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக அனுப்பி வைத்துள்ளது. பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில் ”ஹகிபிஸ்” புயல் பாதிப்பு காரணமாக 19பேர் உயிரிந்துள்ளதாகவும், 16 பேரை காணவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது.
இப்புயல் தாக்கியதால் சுமார் 3 லட்சத்து 76 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டும், 14 ஆயிரம் வீடுகளில் போதிய தண்ணீர் வசதி இல்லாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. டோக்கியோவின் தென்மேற்கில் உள்ள கனகாவா மாகாணத்தில், கடந்த 48 மணி நேரத்தில் 100 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
சாலைகள், வயல்கள், குடியிருப்புப் பகுதிகள் முழுவதும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. வறண்ட சில பகுதிகளில் தண்ணீர் தேங்கிவுள்ளதால் அவை பெரிய ஆறுகள் போல காட்சியளிக்கின்றன.
30,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்டுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உயரமான கட்டிடங்களில் சிக்கியுள்ள சிலரை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:சிரியாவில் திடீர் திருப்பம், சிரிய உள்நாட்டுப் போர் பின்னணி!