ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருவதால் அம்மாநில ஆளுநர் யூரிகோ கொய்கே மற்றும் ஜப்பான் மருத்துவ சங்கத்தினர் அவசரநிலை அறிவிக்குமாறு பிரதமர் ஷின்சோ அபேயிடம் கோரிக்கை வைத்துள்ளதாக ஷின்குவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில், டோக்கியோ அரசு சுகாதார நிபுணர்களுடன் இணைந்து கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய மருத்துவமனைகளில், சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் சிகிச்சைப் பெறுவோரின் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாகாண நிர்வாகங்களுக்கு அரசு அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானை பொறுத்தமட்டில் டோக்கியோவிலும் மற்ற நான்கு மாகாணங்களிலும் மக்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக 'கடுமையான எதிர்விளைவுகளை விரைவாக எடுக்க வேண்டும்' என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி டோக்கியோவில் 143 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மதியம் வெளியான புள்ளிவிவர நிலவரப்படி நாடு தழுவிய அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மூவாயிரத்து 531 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் கரோனா பாதிப்புக்கு 109 பேர் உயிரிழப்பு!