சீனாவில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கோவிட்-19 தொற்று, தற்போது குறைந்துவிட்டது. இருப்பினும் சீனாவைத் தவிர மற்ற நாடுகளில் வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், ஜப்பான் நாட்டில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஜப்பான் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஞாயிற்றுக்கிழமை மட்டும் 568 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் வைரஸ் தொற்றால் ஜப்பானில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,361ஆக உயர்ந்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பிப்ரவரி மாதம் ஜப்பானில் நிறுத்தப்பட்டிருந்த டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் 712 பேருக்கு வைரஸ் தொற்று இருந்தது உறுதிசெய்யப்பட்டது. இதையும் சேர்த்து ஜப்பானில் மொத்தம் 11,073 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 174 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜப்பானில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது. இருப்பினும் ஜப்பானில் குறைந்த அளவே சோதனைகள் நடத்தப்படுவதால் வைரஸ் பாதிப்பு குறைவாகத் தெரிவதாக வல்லுநர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். உண்மையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்பது இதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தற்போதுதான் வைரஸ் தொற்று குறித்த சோதனைகளை ஜப்பான் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. டோக்கியோ உள்ளிட்ட மற்ற நகரங்களில் கோவிட்-19 தொற்று கண்டறியும் மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுவருகின்றன.
அதேபோல ஜப்பானில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டின் பிரதமர் நாடு முழுவதும் அவசரநிலையை வியாழக்கிழமை அறிவித்தார். முன்னதாக இந்த அவசரநிலை டோக்கியோ நகரில் மட்டும் அமல்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விமான சேவை உண்டா இல்லை - குழப்பும் அரசு!