பாக்தாத் : ஈராக்கில் உள்ள கரோனா வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 12க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
ஈராக் நாட்டின் தென்பகுதியில் உள்ள தி ஹார் (Dhi Qar) மாகாணத்தின் நஸிரியாக் நகரில் அல்- ஹூசேன் மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த மாதம் கரோனா சிறப்பு வார்டு ஒன்று அமைக்கப்பட்டது.
70 படுக்கைகள் கொண்ட இங்கு கரோனா பாதிப்பாளர்கள் சிகிச்சை பெற்றுவந்தனர். இந்த நிலையில் திங்கள்கிழமை (ஜூலை 12) இங்கு தீ விபத்து ஏற்பட்டது.
இதில் 50க்கும் மேற்பட்ட கரோனா பாதிப்பாளர்கள் உயிரிழந்தனர். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்கட்ட விசாரணையில் எளிதில் தீப்பற்றும் பொருள்கள் மருத்துவமனைக்குள் இருந்ததால் தீப் பற்றி எரிந்ததாக தெரியவந்துள்ளது.
முன்னதாக ஏப்ரல் மாதம் பாக்தாத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் 82 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : சீனா: மார்ஷியல் ஆர்ட்ஸ் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் பலி