கரோனா வைரஸ் பரவல் காரணமாக பெரும்பாலான நிறுவனப் பங்குகள் சரிந்துள்ளன. இதைப் பயன்படுத்தி இந்திய நிறுவனங்களின் பங்குகளை சீனா வாங்கி வருகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை கையகப்படுத்தும் சூழல் உருவாகும் என எதிர்க்கட்சிகள் அரசை குற்றம்சாட்டின.
இந்நிலையில், இனி வெளிநாடுகளைச் சேர்ந்த தனி நபர் அல்லது நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு மத்திய அரசின் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாகிறது. ஏற்கனவே, இந்தியாவில் முதலீடு செய்வதற்கு பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசு அனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது.
இந்தியாவின் மற்ற அண்டை நாடுகளான சீனா, நேபாளம், இலங்கை, மியான்மர், பூடான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்படும் அந்நிய நேரடி முதலீட்டுக்கும் அனுமதி பெற வேண்டும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கு சீனா கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சீன தூதரக செய்தித் தொடர்பாளர் ஜி ரோங் கூறுகையில், "அந்நிய நேரடி முதலீட்டிற்கான இந்தியாவின் புதிய விதிமுறைகள் உலக வர்த்தக அமைப்பின் கொள்ளைக்கு எதிரானது. அண்டை நாடுகளுக்கு இந்தியா பாகுபாடு காட்டுவது ஏற்புடையது அல்ல", எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நியூசிலாந்தில் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு!