மாலத்தீவில் கரோனா தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தணிக்க ஏதுவாக கடந்த மாதம், 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை மாலத்தீவிற்கு இந்தியா கடனாக வழங்கியது. மாலத்தீவு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கருவூலப் பத்திரத்திற்கு 10 ஆண்டு கால அவகாசத்துடன் ஸ்டேட் வங்கி சந்தா செலுத்தும். மாலத்தீவின் வளர்ச்சி திட்டங்களுக்காக, 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 800 மில்லியன் அமெரிக்க டாலர்களை எக்சிம் வங்கி வழங்கியது. இதன்மூலம் பல உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்ள அந்நாட்டு அரசு முடிவுசெய்துள்ளது.
மாலத்தீவின் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மொஹமட் ஜெய்ஷ் இப்ராஹிம், மாலத்தீவுக்கான இந்திய தூதர் சுஞ்சய் சுதிரை சந்தித்து ஹுல்ஹுமாலே வளர்ச்சியின் வருங்கால வாய்ப்புகள் குறித்து ஆலேசானை மேற்கொண்டார்.
இந்நிலையில்,மாலத்தீவுக்கு 100 படுக்கைகள் கொண்ட புற்றுநோய் மருத்துவமனை மற்றும் 22ஆயிரம் இருக்கைகள் கொண்ட கிரிக்கெட் மைதானம் ஹுல்ஹுமலேவில் கட்டி தரப்படும் என்று மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ட்விட் செய்துள்ள இந்திய தூதரகம் "மாலத்தீவுக்கு வழங்கப்பட்டுள்ள 800 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் திட்டத்தின் கீழ் 100 படுக்கைகள் கொண்ட அதிநவீன புற்றுநோய் மருத்துவமனை ஹுல்ஹுமாலில் அமைக்கப்படும். இந்த திட்டம் சுகாதாரத் துறையில் இருநாட்டுகளுக்கு இடையே ஒத்துழைப்பை உருவாக்கும்". "நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு நவீன கிரிக்கெட் மைதானம் மற்றும் 22 ஆயிரம் பார்வையாளர்களை அமர வைக்கும் திறன் ஆகியவை ஹுல்ஹுமலேவில் கட்டப்படும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.