தோஹா: இது குறித்து கத்தாரில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த ஷோ் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய், "ஆசிய கண்டத்தில் இந்திய நாடு மிக முக்கியமானது. இதற்கான அங்கீகாரத்தை இந்தியாவிற்கு கொடுப்போம். கடந்த காலத்தப்போலவே இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான அரசியல், வா்த்தக உறவுகளை தொடர விரும்புகிறோம்.
எதிர்காலத்தில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். பாகிஸ்தான்-இந்தியா விவகாரம் குறித்து எங்களுக்குத் தெரியும். இருப்பினும், பாகிஸ்தான் வழியாக இந்திய-ஆப்கன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியம்.
இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக, விமான வழிதடங்கள் எப்போதும் திறந்திருக்கும். புதிய ஆட்சியை அமைத்தவுடன் தற்போது நிறுத்தப்பட்டுள்ள வர்த்தகப் போக்குவரத்து மீண்டும் வழக்கம்போல் செயல்படும்" எனத் தெரிவித்தார்.
ஆப்கன்-இந்தியா இடையிலான ஏற்றுமதி, இறக்குமதி
இந்திய-ஆப்கன் இடையே நீண்ட காலமாக ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் நடைபெற்று வந்துள்ளது. ஆப்கனில் இந்தியாவிற்கு அதிக முதலீடுகள் உள்ளன. குறிப்பாக, அந்நாட்டில் உள்ள மிகப்பெரிய முதலீட்டாளர்களில் இந்திய நாடும் ஒன்று. அப்படி அந்நாட்டில் 400க்கும் மேற்பட்ட திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.
இவற்றின் சந்தை மதிப்பு ரூ.22 ஆயிரம் கோடியாகும். 2021ஆம் ஆண்டினுடைய வர்த்தக முதலீட்டு மதிப்பு ஆறாயிரத்து 300 கோடி ரூபாயாகும். சர்க்கரை, மருந்துகள், ஆடை, டீ தூள், காபி தூள், மசாலாப் பொருள்கள் ஆகியவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அங்கிருந்து, உலர் பழங்கள், வெங்காயம் உள்ளிட்டவை இறக்குமதி செய்யப்படுகின்றன.
ஆப்கன் ஆட்சியைப் பிடித்தற்கு பின்னர் தலிபான்கள், ஆகஸ்ட் 19ஆம் தேதியிலிருந்து ஆப்கன்-இந்தியா இடையிலான ஏற்றுமதி, இறக்குமதிக்கு தடை விதித்தனர். வர்த்தகத் தடங்களையும் முடக்கினர். இந்த நிலையில், தலிபான் இயக்கத்தின் மூத்த தலைவா் ஷோ் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஷோ் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய்
ஷோ் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் 1980களின் தொடக்கத்தில் உத்தரகாண்டில் உள்ள டேராடூன் ராணுவ அகாதமியில் வெளிநாட்டு ராணுவ வீராக பயிற்சி பெற்றாா். அதையடுத்து ஆப்கன் ராணுவத்தில் இணைந்து, விலகினார். தற்போது தலிபான்களின் முக்கியத் தலைவராக உள்ளார்.
இதையும் படிங்க: ஆப்கன்-இந்தியா இடையிலான ஏற்றுமதி, இறக்குமதிக்கு தடை