இந்தியாவில் தற்போது இரண்டு கோவிட்-19 தடுப்பூசிகள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின், சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டும் நாடு முழுவதும் உள்ள முன்களப் பணியாளர்களுக்குச் செலுத்தப்படுகிறது.
இந்தத் தடுப்பூசிகள் நல்லெண்ண அடிப்படையில் பல நாடுகளுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, முக்கிய அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கு ஐந்து லட்சம் கோவிட்-19 தடுப்பூசி டோஸ்களை இந்தியா அனுப்பிவைத்துள்ளது.
இந்தத் தடுப்பூசிகளை அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் வாஹித் மஜ்ரோஹ் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் பெற்றுக்கொண்டார்.
அந்நாட்டில் இதுவரை 55 ஆயிரத்து 335 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் 2,410 பேர் உயிரிழந்துள்ளனர். இலங்கை, மியான்மர், நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் இந்தியா கோவிட்-19 தடுப்பூசிகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ.16,000 கோடி ஒதுக்கீடு - மத்திய அரசு