பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்து கோயில்கள் இல்லாததால், அங்கு வசித்துவரும் இந்துக்கள் நாட்டின் வேறு பகுதிகளுக்குச் சென்றுதான் வழிபட்டுவருகின்றனர். இந்நிலையில், இந்துக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் தேசிய மனித உரிமை ஆணையம் கோயில் கட்டுவதற்கு நிலம் ஒதுக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின்பேரில், அந்நாட்டின் தலைநகர் வளர்ச்சி ஆணையம் 2017ஆம் ஆண்டு ஹெச்-9 செக்டர் என்ற பகுதியில் 20 ஆயிரம் சதுர அடி நிலம் வழங்கியது. நீண்ட இழுபறிக்குப் பிறகு இன்று கோயில் கட்டும் இடத்தில் பூமி பூஜை நடைபெற்றது.
பாகிஸ்தான் மனித உரிமைக்கான நாடாளுமன்றச் செயலர் லால் சந்த் மல்ஹி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பூமி பூஜை செய்தார். இதுகுறித்து பேசிய அவர், "இஸ்லாமாபாத்தில் கோயில் கட்ட வேண்டும் என்பது இந்துக்களின் நீண்ட நாள் கோரிக்கை. நகரில் இந்துக்களின் எண்ணிக்கையும் வேகமாக வளர்ந்துவருகிறது. இதற்கு முன் கட்டப்பட்ட சிறுசிறு வழிபாட்டுத் தலங்களும் கைவிடப்பட்டுள்ளன" என்றார்.
இந்தக் கோயிலுக்கு 'ஸ்ரீ கிருஷ்ணா மந்திர்' என்று இஸ்லாமாபாத் இந்து பஞ்சாயத் அமைப்பு பெயரிட்டுள்ளது. கோயில் வளாகத்தில் உடலைத் தகனம் செய்யும் வசதியும் செய்து தரப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : வியன்னாவில் அமெரிக்கா-ரஷ்யா அணு ஆயுத பேச்சுவார்த்தை