இஸ்லாமாபாத்: இந்தியாவின் முக்கியப் பண்டிகைகளுள் ஒன்றான தீபாவளி இன்று நாடு முழுவதும் கரோனா அச்சுறுத்தலுக்கு நடுவே கொண்டாடப்பட்டுவருகிறது.
இந்தியா மட்டுமின்றி, உலகின் பிற நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் தீபாவளி திருநாளை கொண்டாடிவருகின்றனர். இந்தப் பண்டிகைக்கு கனடா பிரதமர் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
அந்த வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தீபாவளி வாழ்த்து கூறியுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், "நாடு முழுவதும் கரோனா அச்சுறுத்தல் இருப்பினும், பாகிஸ்தானிலுள்ள இந்துக்கள் அனைவரும் தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாட வாழ்த்துகள்.
இந்த நாள் உங்களது அனைத்து துன்பங்களையும் போக்கி நன்மைகளை வழங்கட்டும். மக்கள் குடும்பங்களுடன் இணைந்து வீடுகளையும், கோயில்களையும் வண்ண விளக்குகளால் அலங்கரியுங்கள். பாகிஸ்தானிலுள்ள இந்துக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் முக்கிய நகரங்களான கராச்சி, லாகூர் தவிர பிற பகுதிகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.