சீனாவில், இரண்டாம் கட்டமாகப் பரவிய கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 26 நோயாளிகள் நேற்று (ஜூலை 15) பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக, அந்நாட்டு சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில், 259 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 275 பேர் புதிதாக கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதையடுத்து கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 55 ஆயிரத்து 848 ஆக உள்ளது எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் நேற்று ஒருநாள் மட்டும் மூன்றாயிரத்து 533 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 590 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 33 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளதாகவும், இதையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 457ஆக அதிகரித்துள்ளதாகவும் அந்நாட்டு பொது சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தென் கொரியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 61 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் பெரும்பாலோனோர் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் எனவும், தற்போது நாட்டில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 612 பேராக உள்ளது (உயிரிழந்தவர்கள் 291 பேர்) என, அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.