சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ், கட்டுக்கடங்காமல் பரவி உலக நாடுகளை திக்குமுக்காடச் செய்துள்ளது.
இன்றைய நிலவரப்படி உலகளவில் இதுவரை 78 லட்சத்து 55 ஆயிரத்து 400 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், நான்கு லட்சத்து 31 ஆயிரத்து 728 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். மேலும், 40 லட்சத்து 19 ஆயிரத்து 469 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கரோனாவால் வல்லரசு நாடான அமெரிக்காவே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி, பெரு ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
கரோனா பேரிடரைத் திறமையாகக் கையாண்ட தென் கொரியாவில் மேலும் 34 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் மொத்த விலை சந்தை ஒன்று புதிய ஹாட்-ஸ்பாட்டாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக அந்த சந்தைக்கு சீல் வைக்கப்பட்டு, அதனைச் சுற்றியுள்ள 11 குடியிருப்புப் பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : அட்லான்டாவில் ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவர் சுட்டுக்கொலை: காவல் துறை தலைவர் ரிசைன்!