கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த, ஏப்ரல் மாதம் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், சர்வதேச சந்தையில் எரிபொருளின் தேவை வெகுவாகக் குறைந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது, ஒரு கட்டத்தில் சுழியத்திற்கு கீழ் கச்சா எண்ணெய் விலை சென்றது.
தற்போது, உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு வருவதால் எரிபொருளின் தேவை அதிகரித்து, விலையும் கணிசமாக உயர்ந்துவருகிறது. இதுதவிர, கோவிட்-19 காரணமாக ஏற்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு எரிபொருள்களுக்கு விதிக்கப்படும் வரியையும் அரசுகள் உயர்த்தியுள்ளதால், மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, பாகிஸ்தானில் ஒரே நாளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 25 ரூபாயும், டீசல் விலை 21 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் இம்ரான் கான் தலைமையிலான அரசால் நேற்றிரவு வெளியிடப்பட்டது.
அதன்படி, பாகிஸ்தானில் நேற்றுவரை 74.52 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவந்த ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை, இன்று முதல் 100.10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 80.15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் டீசலின் விலை இன்று முதல் 101.46 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் ஒரு லிட்டர் மண்ணெண்ணெயும் 25.50 ரூபாய் உயர்த்தப்பட்டு, தற்போது 59.06 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, பாகிஸ்தானில் எரிபொருள்களின் விலை 42.10 ரூபாய் வரை குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வைரஸ் பரவி கொண்டுதான் இருக்கிறது' - எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!