ஹைதராபாத் : ஆப்கானிஸ்தான் நாட்டில் தகவல் தொழிற்நுட்பத் துறை அமைச்சராக இருந்தவர் சையத் அகமது ஷா சாதத் (Syed Ahmed Shah Saadat).
இவர் ஆப்கானிஸ்தானில் 2020ஆம் ஆண்டுவரை கேபினெட் அமைச்சராக இருந்துவந்தார். இந்நிலையில் ஜெர்மனி தெருக்களில் மிதிவண்டியில் சையத் அகமது ஷா சாதத் (Syed Ahmed Shah Saadat) பீட்ஸா உள்ளிட்ட உணவு பொருள்கள் விற்பது போன்ற புகைப்படங்கள் ட்விட்டர் மற்றும் ஜெர்மனி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சாதத், தாலிபான்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுத்தவர். எனினும் இவர் 2020ஆம் ஆண்டுவாக்கில் ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டார்.
தனது ராஜினாமாவுக்கு பிறகு ஜெர்மனியில் வாழத் தொடங்கினார். சாதத், ஆப்கானிஸ்தானில் 2005-2013 வரை தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சரின் தலைமை தொழில்நுட்ப ஆலோசகராக இருந்தார். அவர் 2016-2017 வரை லண்டனில் உள்ள அரினா டெலிகாமின் தலைமை நிர்வாக அலுவலராக பணியாற்றியுள்ளார்.
தாலிபான்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று ஆப்கானிஸ்தான் தலைநகருக்குள் நுழைந்தனர். தொடர்ந்து நாட்டின் தலைநகரை கைப்பற்றிவிட்டதாக அறிவித்தனர்.
இதன்மூலம் அமெரிக்காவின் 20 ஆண்டுகால பரப்புரையும் முடிவுக்கு வந்தது. ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சம் புகுந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : பண மூட்டைகளுடன் தப்பி சென்றேனா? அஷ்ரப் கானி ஆதங்கம்