இலங்கை தேர்தல்
அண்டை நாடான இலங்கை தீவில், அடுத்த மாதம் (நவம்பர்) 16ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
அந்நாட்டின் தேர்தல் ஆணைக்குழு கடந்த மாதம் 18ஆம் தேதி இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்கள் சில தமது ஜனாபதிபதி வேட்பாளர்களை அறிவித்திருந்தன.
கோட்டாபய ராஜபக்ஷே
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது ஜனாதிபதி வேட்பாளராக பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரை ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி அறிவித்தது.
இதையும் படிக்கலாம்: இலங்கை அதிபர் தேர்தல் புதிய வரலாறு
அதனைத் தொடர்ந்து, மக்கள் விடுதலை முன்னணி தனது ஜனாதிபதி வேட்பாளராக அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்கவின் பெயரை அறிவித்தது.
35 வேட்பாளர்கள்
மொத்தம் 35 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர். கோட்டாபய ராஜபக்ஷே கடந்த 9ஆம் தேதியே முறைப்படி தனது தேர்தல் பரப்புரையை தொடங்கி விட்டார்.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி சார்பாக, சஜித் பிரேமதாசா களம் காண்கிறார்.
இவர் ஆளும் அரசில் கலாசார அமைச்சராக உள்ளார். இருப்பினும் ஆளும் கட்சி தரப்பில் யானை சின்னத்தில் போட்டியிட இவர் மறுத்து விட்டார். இந்நிலையில் இந்த தேர்தல் வெளிநாட்டை சேர்ந்த 3 கண்காணிப்பு குழு முன்னிலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
சிறிசேனா மறுப்பு
அறிவிப்பின்படி மேலும் ஒரு குழு கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளது. அக்குழு விரைவில் இணையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இரண்டாவது முறையாக போட்டியிட மறுத்து விட்டார் என்று ஜனாதிபதி மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் நடக்க இன்னும் ஒரு மாத காலமே இருப்பதால் இலங்கையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இதையும் படிக்கலாம்: ஈஸ்டர் குண்டுவெடிப்பு : வரும் 23ஆம் தேதி விசாரணை அறிக்கை இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!