இந்தியப் பகுதிகளை உள்ளடக்கி புதிய வரைபடத்தை நேபாளம் வெளியிட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், வெளியுறவுத்துறை செயலராக பதவியேற்றதைத் தொடர்ந்து முதல்முறையாக ஹர்ஷ் வர்தன் ஸ்ரீங்லா, இருநாள் பயணமாக நேபாளம் செல்லவுள்ளார்.
எல்லைப் பிரச்னை குறித்த விவகாரத்தில் இந்தியா தெளிவான நிலைபாட்டை ஏற்கனவே நேபாளத்திடம் தெரிவித்துள்ளது. நேபாளத்தின் வரைபடத்தை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை எனவும், எல்லைப் பகுதிகளை விரிவாக்க நேபாளம் முயன்றுவருவதாகவும் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில், நவம்பர் 26ஆம் தேதி நேபாளம் செல்லும் ஹர்ஷ் வர்தன் ஸ்ரீங்லா, அடுத்த நாளே இந்தியா திரும்புகிறார். இந்த சந்திப்பின்போது, எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட மாட்டாது எனவும் கூறப்படுகிறது.
மேலும், எல்லை சச்சரவு குறித்து ஆலோசனை தனியாக நடைபெறும் என்றும், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தில் கரோனா பரவல் அதிகரிப்பதற்கு இந்தியாவே காரணம் என நேபாளத் தலைவர்கள் முன்னதாக விமர்சித்துள்ளனர். வரைபட விவகாரத்திலும் நேபாளம் கடுமையான போக்கையே கடைபிடித்தது.
இருப்பினும், தற்போது இரு நாடுகளும் சரியான பாதையிலேயே பயணித்து வருகின்றன. மக்கள் பயன்பெரும் வகையிலான இணைப்புத் திட்டங்கள், நேபாள மக்களை பாதுகாப்பாக திருப்பி அனுப்பியது, வர்த்தகக் கட்டமைப்பில் மேம்பாடு உள்ளிட்டவற்றால் இரு நாடுகளிடையேயான பதற்றம் ஓரளவுக்கு தணிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.